Friday 24 December 2010

கொலை-1

உடைந்து-
சிதறிய என்
தாயின் உடலை
தெடிப் பொறுக்கி
நிமிர்கையில்
பொம்பர் என் தலையிலும்
போட்டுச் சென்றது
தன் பாட்டில்...!
முல்லைஅமுதன்

Sunday 19 December 2010




இன்று..!
எல்லைகளைப் பிரித்து போடு!.
உனக்கான நிலத்தை நீயே-
வரையறை செய்து கொள்!
வேலிகளை பலமாக்கு.
எனியும் வயிரவ சூலங்களை
நாட்டுகின்ற செயல் முறையை
இல்லாதொழி!
அரச மரங்கள் முளை விடமுன்
உன் கொடியே
உனதென-
ஊன்றி நடு!
எவன் வருவான்
என்பதெல்லாம் பொய் என்றுணர்.
அயலவனுக்கும் சொல்லி வை..
அல்லது புரிய வை!.
இறுமாப்போடு வாழ எனியாகிலும் பழகிக் கொள்.
கோவணமும் பிடுங்கியாயிற்று.
பூவரசம் இலையில்-
ஊதுகுழல் ஊதலாம் என்கிற கனவை விட


தென்னையிலும்
வெடி சுரக்கும் என்பதை எதிரி உணரட்டுமே!
உனக்கான மொழி இல்லை
என்று-
அவனும் சொன்னதில் வரும் கொள்.
அயலவனையும்-
யோசிக்க வை.
அவனுக்கும் சேர்த்தே-
உன் மொழியில்
தேசிய கீதம் பாடிப் பழகு!!
தேவாரங்களும் பொய்க்கட்டும்.!
-முல்லைஅமுதன்.
19/12/2010

Monday 13 December 2010

நீங்கள்


நீ விதைத்தவைகள்
பூக்கும் வேளையில்
திசைகள் முறிந்தனவோ?
**
அவர் பற்றியோ..
இவர் பற்றியோ..
இல்லாமல் உன் முகம் பார்த்து நிற்கின்றன..
உன் செடிகள்!
ஒரு உழைப்பு ஓய்வு கொள்கிறது!
சக பயணி-
கிளை பிரிகிறது.
**

நாற்றங்கால்களாய் நாங்கள்.
சிலகணம் நினைப்பதுண்டு..
வலிக்காமல் வாழ்க்கையில்லை.
எனினும்-
பிறர் மரணம் எனினும் வலிக்கவே செய்கிறது.
இங்கு-
தன் மரணம் பற்றியே உழல்கிறது.
**



சிலுவை யுத்த நாட்களில்
புத்தனின் அடவடித்தனம்.
வியாபாரிகளின் உலகம்.

நீங்கள் நாங்களாகி
நாமாக, நாணாக
இணைகையில்
பாதி வழியில்
பாதை தவறியதாய்
நான் நின்றேன்.....

என் தாய்க்கும்
மகனாகி
எனக்கும் நண்பனாகி
தோள்தொட்டாய்!
தொடர்ந்தாய்!!

என் தோட்டத்தில்
விழுதுகள் இறுகியதாய்
உணர்ந்தேன்
இப்பொழுது
வேரறுந்து நின்றேன்!
காற்றும்
பொய் சொல்லிச் சென்றது!!
வலிக்கின்ற மரணங்கள் -கவிஞர்। முல்லை அமுதன்



வண்ணத்துப் பூச்சி குரலெடுத்து-
ஓலமிட்டது….
என் இறக்கைகள் அறுபட்டு
தும்பியாவேனோ எனும் அச்சத்தில்-
தேர்தலாய் விடிகிறது!

***

முள்ளிவாய்க்கால் அவலம் உணர
பாராளுமன்ற சதுக்கத்தில்
பின்னர்-
தெருவில் இறங்கினோம்…
மரணங்கள் வலித்தன…!

***

பூகோளப்பந்தின் அதிபதி
விழித்திருக்கும் போது கூட
தூங்குபவர் போல் இருப்பவரிடம்
நெற்றிக் கண்ணை திறப்பார்
என எதிப்பார்க்க முடியாது..!
இது எரிகோள்களின் காலம் !
உடல்கள் பிணமாய் எரிகின்ற காலம்..!!

***

விரல் இடுக்கைகளில் இடப்படும்
மை அனைத்துமே
எம் மக்களின் குருதி
எனும் உண்மை எனியாகிலும் உணர்வோமாக!

***

இன்று
தங்கை தொடர்பில் வந்தாள்
அங்கு கொலை,
இங்கு கடத்தல்
அம்மம்மா அடித்துக் கொலை, களவு
அண்ணல் பற்றி சனத்திடையே உணரப்படுகிறதாம்….

***

பிணக் குவியல்களிடையே
நடந்து வந்த
என் மகன் முன்னே-
புத்தனின் தலையுடன்
இன்றைய அரசன்!
நிராயுதபானிகளாய் நாங்கள்!
மௌனித்த மானுடத்தின்
மூச்சுக்காற்று எங்கள் பூமியில்
கந்தகம் சுமந்து புற்களாய்
நிமிர்ந்து நிற்கின்றன….
மிதியாதீர் என தோழி
சொல்லிப் போனாள்
அசரீரியாய்….

***

எல்லாம் முடிந்தது என
விமானம் ஏறலாம்….
பியர் குடிக்கலாம்…
அதற்கு முன் எமக்கான
வலி நிவாரணி குடிக்கலாம்….
ஈழமாக….!!!
படுத்திருப்பதே சுகமானது!


சும்மா படுத்திருப்பதே
சுகம் தருகிறது.
கூரையை விறைத்துப் பார்த்த படி..
மல்லாக்காக படுத்திருகிற போது-
வானம் கறுத்தால் தான் என்ன?
+
கால்களை எறிந்தபடி-
எதுவும் நடவாதது போல...
வானம் நீலமாயிருந்தால் தான் என்ன?
+
பிள்ளைகள் கத்தட்டுமே!
பாத்திரங்களுடன் போராடும் மனைவி
பற்றிய கவலையே தேவை இல்லை.
+உபகாரப் பணம் வங்கியில் சேரும்.
களவில வாங்கின வீடு வாடகையைத் தரும்.
சும்மா படுத்திருப்பதே சுகம்.
அவ்வப்போது...
பிள்ளைகளின் பிறந்த நாள் கேக் வெட்டலாம்.
அறுபதாம் கல்யாணத்துக்குப் போகலாம்.
கீரிமலையை நினைத்து கடல் குளிப்பு..
கூவிலை நினைத்து கிடாய் வெட்டு..
வேறென்ன...
சும்மா படுத்திருப்பதே சுகமானது.
பரவாயில்லை...!
வானம் பொழிகிறது.
பொழியட்டுமே.
என் மேனியில் படாதவரை
சளி பிடிக்காது.
காற்று உடலில் பட்டு சுகத்தைத்
- தர படுத்திருக்கலாம்.
யாராவது தோள் தந்தால்
ஏறி நின்று சவாரி செய்வது
பிடித்தமான பொழுதுபோக்கு.
ஊர்வலமா? எதற்கு?
யாராவது குத்தி
அரிசியாய் தந்தால் கஞ்சி குடிக்கலாம்.
கூட்டத்தோடை கத்தினால் தெரியாது தானே...
ஊருக்கும் போக வேணும்.

ஆமி பிடிக்கும்..
அங்கும் சொல்லலாம்.
தமிழ் ஈழமோ?

சாச்ச..ஆர் கேட்டது?
இலவச உணவு சாப்பிட்டிட்டு-
வந்து
படுத்திருப்பதே சுகமானது.
செம்மொழி மாநாட்டிற்கு
போகலாம்..
கொழும்பிலும் விழாச் செய்யலாம்.
பிறகு-
ஈழம் ஒரு செத்த கனவு...
வானொலியில் குரல் தரலாம்.
சும்மா இருப்போம்.
நாங்கல் வாழ அவர்கள் மரனித்ததை
மறந்து-இன்னும் சாக...விசா வேண்டி பிரர்த்திக்கிற
மந்தைக் கூட்டமாய்...
'டமிலராய்'
சோரம் போவோம்...!
-முல்லைஅமுதன்-
உருத்திர தாண்டவம்



அறுபத்தி நான்கில் இறுதியில்-
புயலால் நீ மீண்டு-
வந்தாய்..
.கடவுள் காப்பாற்றினார் என்றோம்.
77 இன் கலவரத்தில் தங்கை
திரும்பி வந்தாள் சேதாரமுமின்றி...
தலை கொய்து
சந்தியில் தொங்கவிடப்பட்ட
நண்பனின் வாழ்வு பற்றியும்
கடவுள் சொன்னார்.
87 இல் இனப்புயலில் ஊர் வந்தோம்.
அம்மாளாச்சி பற்றியும்
மெய்யால் அளந்தோம்.
90 உம் போய்-
புனித நாளென
சுனாமியும் புதிதாய் சேதி சொன்னது.
இப்போ-
ஆயிரம் ஆயிரம் தலைகள்
கொய்த பின்பும் மௌனமாக
என்னை வத்திருக்க கற்றுத் தந்ததெப்படி...?
அரிச்சந்திரன் பற்ரியும் பிள்ளையார் கதை பற்றியும் சொல்லித்
தந்த உன்னால்-
முருகன் வதை பற்றிச் சொல்லித்
தர முடியாது போனது ஏன்?
மௌனமாக இருக்கையில் -
அவரவர் என் முதுகில் எறிப் போகையில்-
சும்மா இருக்க கற்றுத் தந்ததே நீயல்லவா!
உன் அருகில்-
நமது கடளரிடம் சற்றுக் கேட்டுச் சொல்!
உனக்கென்ன...
சிரித்தபடி புகைப்படத்தில்-
உன் பாட்டில் இருக்கிற உன்னால் ஒரு தடவையாவது
சொல்லி விடு...
அம்மாவிடம் அவ்வப்போது சந்நதம் காட்டும் நீ-
இவர்களின் –
முன்னால் வந்து
ருத்திர தாண்டவம் ஆடிவிடு....
இன்னும் ஆயிரம் தலைகள்
கொய்வதற்கு முன்னால்...!
---முல்லைஅமுதன்-
21/06/10.

நானும் நீயுமான...என்னை நீங்கள்
நிறம் பிரிக்கலாம்...
அது-
உங்கள் உரிமை..
இவன்-
இந்த தெருவில் வசிப்பவன்.
இன்னாரின் மகன்
என்றாலும்-
எதுவும் சொல்வதற்கில்லை..!
மழை-
எனக்கும் சேர்த்தே பொழிகிறது.
என்பதை-
மறுக்கிற போது தான்
கோபம் வருகிறது..!
பனிப்பூக்கள்
உன் வீட்டிலும் பூத்தது...
என் தவ்று எதுவுமில்லை..!
என் மரணம் பற்றி
நீ-
சிலாகிக்கும் போது
நெருப்பை
துப்ப மனது விரும்புகிறது.
நீ யார் என்
மரணம் பற்றி சொல்ல...?
கடவுள் என்கிறய்.
அப்படியானால்
இத்தனை நாள்
வழிபட்டது யாரை?
முகம் சிதைகிற-
ஒரு நாள் வரும்..
அப்போது
என் வினாவுக்குரிய
பதில்
உன்னிடமிருந்து
நிச்சயம் வரு..!
முல்லைஅமுதன்-
20/05/90
சுதந்திரம் என்பது...!

இன்றைய பொழுதில்-
யாவரு போலவே
அகதி முகாமில் விழித்திருக்கிறோம்..
உன்-
அழைப்பு, கை குலுக்கல் எல்லாம்...
வழமை போலத் தான்
பொம்பர்களுடன் நடை பெறுகிறது.!
நீங்கள்-
சுதந்திரமானவர்கள்...
என்ற படி
செல்களும் ஏவப் படுகின்றன...
உலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன்...!.
குழந்தை, குமரி
கூடவே-
அப்பனும், ஆதாளும்
வீடிழந்து நிற்கின்றனர்...!
கையொடிந்த ராஜாவானாலும்
சுப்பர் சொனிக் விரடும்...
வெடி குண்டுகளை-
வானத்தில் விதைத்துவிட்டு
நட்சத்திரங்கள் என்று
குழந்தைக்கு காட்ட முடியுமா?

யாவர்க்கும் அகதி முகம்...
பரிசளித்தது...
நிச்சயம் யார் என சொல்..!
விடை காணாது துடிக்கிறாய்.!
சூரியனைப் பிடித்து குழந்தைக்கு
பரிசளிக்க முடியவில்லையே...
என நிலவிடம்-
முறையிட்டால் எப்படி?
பூமி கிழிபடும் என மௌனித்தது போதும்..
உரத்துச் சொல்...
'சுதந்திரம் என்பது பற்றி'
வானம் நொருங்கட்டும்..!
-முல்லைஅமுதன்-
7/02/97
எலி


பொறிக்குத் தப்பியவை
தங்கள்
குழந்தைகளையும்
என் அறைக்கு
அறிமுகம் செய்து வைத்துள்ளன.
நல்லவேளை...
புத்தகங்களைத் தின்னும்
சூட்சுமத்தை இன்னும்
கற்றுத் தரவில்லை

பொறி-
நஞ்சு..
இப்போ சலித்துவிட்டது.
ஜீவன் பிரிவதைத் தாங்க முடிவதில்லை.
'ஜீவகாருண்யத் தலைவனாக்கலாமோ?'
நண்பர்கள் யோசிக்கின்றனர்
துர்நாற்றம் பழகிவிட்டது.

அறை
புதிதாய்த் தேடுவது முடிகிறதா?
சுதந்திரமாகத் திரிகிறவைகள்
உடலை
தீண்டாமல் இருக்கும் வரை
பாக்கியசாலிதான்
கீச்சிடும் சத்தம் கூட
உடைந்த ரெக்N;காட்டின் சத்தம்போல்...

உறவுகள்
இழந்து வாழ்கின்ற எனக்கு
இவைகளே உறவுகள் போலத்தானோ?
வாழ்க எலிகளே!

முல்லைஅமுதன்

திலீபா

ஒரு
ஈழத்துக் குயிலொன்று
அன்று
பாட மறந்தது...
ஆம்.. எங்களின்
சோகம் துடைக்கப்
புறப்பட்ட...
விடுதலைக்குயில்களும்
அவனுக்காய்..
எங்களுடன்
அஞ்சலி செலுத்திக் கொண்டன.

மனிதம் மறக்கப்பட்ட
மண்ணில்-
சூரியனைச் சுமந்து வரவே
புறப்பட்ட அவன்-
அமைதி தரவந்து
அமைதியையே கொலை
செய்த அவர்கள்
முன்-
தனித்தே விரதம் காத்தான்

'துப்பாக்கியை விட
விரதம் வலிமை மிகுந்தது'
எங்களையும்
நிமிர வைத்தது...
அங்கே பொபி சாண்ட்ஸ்
இங்கே .. இவன்..
ஒளித்து ஓடுதல்
மரணபயம்... இவைகளை
ஒழித்து-
எங்களை-
நிறுத்தி...
வீதிக்கு வரச் செய்தவன்.

'நீ நிமிர்ந்தால்
வானம் காலடியில்'
அவை
கறுப்பு நாட்களே....
எனியாவது
தூக்கம் கலைந்து எழுந்து
வாருங்கள் தோழர்களே!

'அக்கினி நாட்கள்
இதுவென...
ஒரு புதிய விதி
செய்வோம் என்றே'
திலீபனும்
மீண்டும் எங்களில்
உயிர்பெறுவான்!



முல்லை அமுதன்
லண்டன்.
இன்றுவரை...
குடைவழி ஒழுகும்
மழை நீர்
குடி நீர் முகம்
துடைக்கவும் ஆயிற்று.
நடை பாதை கூட
மக்கள் குடியிருப்பாயிற்று.

அகதி என்று சொல்லாதே..!
இடப்பெயர்வு என
அடித்து சொல்லும் காற்று!!
எனினும்..எனினும்..
இன்று வரை-
ஹெலிக்கு, பொம்பருக்கு
பயந்து வீழ்ந்து அழுமே
என் குழந்தை..
நாளாந்த வலியாக தொடரும்!

-முல்லைஅமுதன்