Friday 31 August 2012

காலம் நாளைக் கிழித்தது.
வரம் கொடுக்க மறுக்கும்
தேவர்களுக்காக பூஜை செய்தாள் மனைவி.
முற்றத்தில் என்றுமே பூக்காத செடிகள்.
கவிதை சொன்னாள் மகள்.
இந்த-
நாளின் என் அன்பளிப்புக்காக
அவர்களும் காத்து நின்றார்கள்.
ஏனோ
மனம் உற்சாகமாயில்லை.

நரை மயிரின் சிரிப்பு
வயதை ஏளனமாய்ச் சொன்னது.
இதே பொழின் அன்றைய நாளில் தங்கை சிதைந்து வந்தாள்.
கொஞ்சமாயாவது
சிரிக்கச் சொல்லி
மகன்
புகைப்படக்கருவியுடன் வந்து நின்றான்.
சிரிப்பு மறந்த ஒரு பொழுது இன்றில் விடிந்திருக்கிறது.
நாட்குறிப்பில் எதை எழுதுவது?
சுடுமணல் குளிர்கிறது..கடுங்குளிர் சுடுகிறது.
நிலக் கண்ணிவெடியில் உடல் சிதறி
வீழ்ந்த என் அப்பா...விதவையாய் நின்றழுத என் தாய்..
இரவு கழிவதை அனுமதிக்கமுடியாது..
விடிதல் என்பது
இறத்தலேயாகும்..நாட்காட்டியின் இலைகள் உதிர்வதைப்போல..
வாழ்த்துசொல்ல வந்த உன்னிடம் தருவதற்கு
எதுவுமில்லை...கணங்களின் வலிகளைத் தவிர..
போ!
என்றாவது என் பொழுதுகள் விடிந்தால்
சொல்லி அனுப்புகிறேன்...
என் சிதையை வந்து பார்த்துவிட்டுப்போ!!
முல்லைஅமுதன்-27/08/2012