Sunday, 20 January 2013

பொங்கல் பிச்சை
உனக்கானது எனக்கும்
எனக்கானது உனக்கும்
வசமாக வேண்டும்.
அப்போது சொல்லு..
வாயார வாழ்த்துகிறேன்.
பொங்கிய நினைவுகளை நீயே
அழித்துவிட்டு-
வேடிக்கையா காட்டுகிறாய்?
எனக்கு பசிக்கிறது.
உணவில்லை.
நீ பிச்சையிடுகிறாய்!
இதை நட்பென்று எப்படிச் சொல்ல?
நீ சொல்லித் தானே
பாதுகாப்பானது என
வந்து இழந்தோமே?
குருதி காயவில்லை.
வாழ்த்து சொல்ல விரும்புகிறாய்.
முடியாது போ.
இன்னொரு யுக அழுகை உன்னால் வேண்டாம்.
என் முற்றத்தில் நாம் பொங்கும் காலம் வரும்.
அப்போது வா..
அன்னியனாகவே கை குலுக்கலாம்.
காலம் விரும்பினால்
சமமாய் பசியாறலாம்.
பிச்சை வேண்டாம்  போ!!
-முல்லைஅமுதன்
  11/01/13

எலி..!
பொறிக்குத் தப்பியவை
தங்கள்
குழந்தைகளையும்
என் அறைக்கு
அறிமுகம் செய்து வைத்துள்ளன.
நல்ல வேளை
புத்தகங்களைத் தின்னும்
சூட்சுமத்தை இன்னும்
கற்றுத் தரவில்லை.
பொறி
நஞ்சு..
இப்போ சலித்துவிட்டது.
ஜீவன் பிரிவதைத் தாங்க முடிவதில்லை.

"ஜீவகாருண்யத் தலைவனாக்கலாமோ?"
நண்பர்கள் யோசிக்கின்றனர்.
துர்நாற்றம் பழகிவிட்டது.
அறை
புதிதாய்த் தேடுவது முடிகிறதா?
சுதந்திரமாகத் திரிகிறவைகள்
உடலை
தீண்டாமல் இருகாமல் இருக்கும்வரை
பாக்கியசாலிதான்.
கீச்சிடும் சத்தம் கூட
உடைந்த ரெக்கோட்டின் ஒலி போல்..
உறவுகள்
இழந்து வாழ்கின்ற எனக்கு
இவைகள் உறவுகள் போலத்தானோ?
வாழ்க எலிகளே!
    முல்லைஅமுதன்
      -2006

Friday, 4 January 2013

2013
சென்ற ஆண்டு விலகிச் சென்றதில்
அதிக வருத்தம் இல்லை.
வரும் நிச்சயமாய்
அதிக நோவுகளைச்
சுமந்து வரத்தான் போகிறது எனப்தே!
என்னுள் உறைக்கிற
உண்மைகள்!
இது வரை வருந்தாத
உலகங்கள்
எனி எமக்காக
அழும் என்பதிலும்
கிஞ்சளவும் எதிர்பார்ப்பு இல்லை.
ஆடும் நனையும்!
ஓனாயும் அழும்!!
நான் நாமாக
மாறும் வரை
வருடங்கள் இனிக்காது!!

    முல்லைஅமுதன்
       03/01/2013

போராடுவோம் தமிழனாக

இன்னும்
நாம் முகமூடி மனிதர்களாய்
வாழத்தான் வேண்டுமா?
சதுக்கத்தில் நோன்பிருந்ததை
மறந்து புழுதிமண்ணைத்
தட்டியபடி
விமானம் எடுத்தோரே..
உங்கள் காணிகள் சுகமா?
முந்திப் பார்த்த சனமும் நலமா?
சிதைக்கப்பட்ட கல்லறைகளின்
மீதேறி
நின்றபடி
உரத்துச் சொல்லுங்கள்...
தமிழனென்று...
மாமனிதர்களின் வலி மறந்தோரே-
வெட்கமாக இல்லை...
அரசு தரும்..
இந்தியா தரும்..
ஐ.நா பெற்றுத் தரும்
என்று இலவசங்களை
எதிர்பார்க்கும் வீணர்களே..
விழி பிதுங்கி வலி அடக்கி
சாவினைத் தழுவிய எத்தனை மனிதங்கள்?
உலக முதலைகளிடம் மனிதங்களை
எப்படி எதிர்பார்ப்பாது?
முதலில் நாமே சுமக்க முனைவோம்...
குறைந்த பட்சம் மானுடம் காக்கும் மனிதர்களாக,
தமிழனாக இருப்போம்...
ஈழக் கனவுகள் நமக்கும்தான் என்பதை உணர்வோம்...
போராடுவோம்!

முல்லைஅமுதன்
09/12/12