Friday 13 April 2012

மௌனமாய் சபதம் கொள்



உன் ஏளனம் புரிகிறது.
வாழத்தெரியாதவன் என்பது தெரிகிறது.
ஆனாலும் என்ன செய்ய?
பிடிக்கிறது என்பதற்காக
குழந்தைக்கு
புத்தாடை எடுக்கும் போது கூட-
ஊரார் குழந்தைகள் பற்றிய
நினைப்பும் வலிக்கிறது.
உனக்கு முடிந்திருக்கிறது.
அந்தக் குழந்தைகளின் நிர்வாணம் தான்
என்னை உடைகள் உடுத்த வைத்திருக்கிறது.
அந்த மனிதர்களின்
மரணம் தான் ஒரு குவளை
நீர் அருந்த வைத்திருக்கிறது.
ஆண்டாண்டு காலமாய்
வாழ்ந்து தளைத்திருந்த
மனித மரங்களைத்
தறித்து வீழ்த்தியவனிடம் மண்டியிடச் சொல்கிறாய்!
முடியாது போ!
வீர மரணம் எய்திய
உன் தங்கையை உயிர்ப்பித்துக்கேள்.
வாழ்வின் வலிமை பற்றி...
மரணம் சாதாரணமொன்றல்ல..!
எழுதியதை முடித்துக்கொள்ள இது ஒன்றும் சிறுகவிதையல்ல....
மானுட சரித்திரம்..ஒரு இனத்தின் மீதான இன சங்காரம்.
மண்டியிடச் சொல்லி
உலகின் வல்லூறுகள் செய்து முடித்த
வதை அந்தாதி.
ஒரு இனத்தின் யுகம் யுகமான
சோகத்தின் உச்சக் கட்டம்
நடந்து முடிந்த நாட்களை மறந்து
சன்னதமாடுகிறாய்.
வேண்டாம்.
இனியாவது சங்கல்பம் கொள்..
வதைகளின் கதைகளை
உன்-
குழந்தைக்கும் சொல்லிக் கொடு.
வதைகளைத் தந்தவன்
வதைபடும் வரை விரதம் இரு!
சூரசம்காரம்
கொள்ளும் அந்த நாள் வரும் வரை
மௌனத்தை அர்த்தப்படுத்து..!
பின்னர் வா...
புத்தாண்டாய் ஆடிக்கூழ் குடித்தபடி கொண்டாடுவோம்...!
-முல்லைஅமுதன்
-13/04/2012

1 comment:

  1. வதைபட்டவர்கள் இறந்து போயிருக்கக் கூடும்
    வதையின் வாதை இன்னமும் நம்முள்
    வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை
    மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும்
    கவிதை அருமை.தொடர வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete