
உருவாகும் போராளி!
இப்படி-
உட்கார்ந்து கொள்ள
உனக்கு முடிகிறது?
தந்தையைப் பற்றி
புகார் செய்ய
பொலிசிடம் போன
உன் தங்கை
கற்பழிக்கப்பட்டு
திரும்பி வரவும்..
பயங்கரவாதி என
கைது செய்யப்பட்ட
உன் தம்பி பற்றி
விசாரிக்கப்போன
உன் அம்மா
பிணமாய் வந்ததும்..,
இறந்த உடலைக் காட்டி
'இது உன் தம்பியா?'
என்ற போது
இல்லை என்று அழுதபடி
பொய் சொன்ன அக்காள்
நிரந்தரமாய்-
அழுகையைக் கட்டிக்கொண்டதும்..,
இதற்குப் பிறகும்
உட்கார்ந்து கொள்ள
உன்னால் முடிந்திருக்கிறது.!
ஒன்று சொல்வேன்-
உனக்குள்ளும்
ஒரு போராளி
உருவாகி கொன்ன்டிருக்கிறான்
என்பது எனக்குத் திடமாகத் தெரிகிறது!
-முல்லைஅமுதன் (-1994-)