Saturday, 31 December 2011

காதலித்துப் பார்..!



உன்னையே காதலித்துப் பார்..
உலகம் உன்னுள் சுருண்டு கொள்ளும்..
காதலித்துப் பார்..!!
காதல் இல்லையேல் எதுவும் இல்லை..
காதலித்துப் பார்..!!!
யாதும் உன் விரல் சொடுக்குக்கு காத்திருக்கும்..
காதலித்துப் பார்..!!!!
ஏவுகணைகள் சேவகம் செய்யும்...
காதலித்துப் பார்..!!!!
ஈழம் உனக்கு வாய்த்திருக்கும்...!

-முல்லைஅமுதன்

Sunday, 25 December 2011

நூல்களும்....


நூல்கள் எனக்குச் சொந்தம்.
எதை இழப்பினும் அவற்றை இழக்கச் சம்மதமில்லை.
உனக்கு எப்படியோ?
எனக்குள் வலி எடுத்தது.
யாரோ வாள் எடுத்துச் செருகியதாய்
குருதி கொட்டுகிறது.
சுலபமாய்-
சொல்ல உனக்கு முடிந்திருக்கிறது.
அன்பை அறுப்பது போல ..!
முன்னரும்-
உறைவாளைச் செருகுவது போல
நூலை இடுப்பில் செருகிச் சென்றான் நண்பன்..
இப்போது நீ..!...
இதயத்தை தருமாப் போல நூலை உன் கையில் சேர்த்தேன்.
தொலைந்து விட்டதாய் சொல்கையில் மொத்தமும் இழந்ததாய்...
உயிர்ப்பென எழ வைப்பதே நூல் என்பதை எப்போது உணரப் போகிறாய்...?
இப்படிச் சொல்லி எவரையும் ஏமாற்றிவிடாதே....
என்னைப்போல இறந்து விடுவார்கள்...!
- முல்லைஅமுதன் -

Saturday, 5 February 2011


உருவாகும் போராளி!
இப்படி-
உட்கார்ந்து கொள்ள
உனக்கு முடிகிறது?
தந்தையைப் பற்றி
புகார் செய்ய
பொலிசிடம் போன
உன் தங்கை
கற்பழிக்கப்பட்டு
திரும்பி வரவும்..
பயங்கரவாதி என
கைது செய்யப்பட்ட
உன் தம்பி பற்றி
விசாரிக்கப்போன
உன் அம்மா
பிணமாய் வந்ததும்..,
இறந்த உடலைக் காட்டி
'இது உன் தம்பியா?'
என்ற போது
இல்லை என்று அழுதபடி
பொய் சொன்ன அக்காள்
நிரந்தரமாய்-
அழுகையைக் கட்டிக்கொண்டதும்..,
இதற்குப் பிறகும்
உட்கார்ந்து கொள்ள
உன்னால் முடிந்திருக்கிறது.!
ஒன்று சொல்வேன்-
உனக்குள்ளும்
ஒரு போராளி
உருவாகி கொன்ன்டிருக்கிறான்
என்பது எனக்குத் திடமாகத் தெரிகிறது!
-முல்லைஅமுதன் (-1994-)

Sunday, 23 January 2011


இன்று வரை..!
குடை வழி ஒழுகும்
மழை நிர்
குடி நீராகும்..
சேற்று நீர் முகம்
துடைக்கவும் ஆயிற்று!
நடை பாதை கூட
எங்கள் குடியிருப்பாயிற்று..
அகதி என்று சொல்லாதே!
இடப்பெயர்வு என
அடித்துச் சொல்லும் காற்று!
எனினும்..எனினும்..
இன்றுவரை-
ஹெலிக்கு, பொம்பருக்கு-
பயந்து விழுந்து அழுமே
என் குழந்தை!
நாளாந்த வலியாக இது தொடரும்..
முல்லைஅமுதன்.

Friday, 24 December 2010

கொலை-1

உடைந்து-
சிதறிய என்
தாயின் உடலை
தெடிப் பொறுக்கி
நிமிர்கையில்
பொம்பர் என் தலையிலும்
போட்டுச் சென்றது
தன் பாட்டில்...!
முல்லைஅமுதன்

Sunday, 19 December 2010




இன்று..!
எல்லைகளைப் பிரித்து போடு!.
உனக்கான நிலத்தை நீயே-
வரையறை செய்து கொள்!
வேலிகளை பலமாக்கு.
எனியும் வயிரவ சூலங்களை
நாட்டுகின்ற செயல் முறையை
இல்லாதொழி!
அரச மரங்கள் முளை விடமுன்
உன் கொடியே
உனதென-
ஊன்றி நடு!
எவன் வருவான்
என்பதெல்லாம் பொய் என்றுணர்.
அயலவனுக்கும் சொல்லி வை..
அல்லது புரிய வை!.
இறுமாப்போடு வாழ எனியாகிலும் பழகிக் கொள்.
கோவணமும் பிடுங்கியாயிற்று.
பூவரசம் இலையில்-
ஊதுகுழல் ஊதலாம் என்கிற கனவை விட


தென்னையிலும்
வெடி சுரக்கும் என்பதை எதிரி உணரட்டுமே!
உனக்கான மொழி இல்லை
என்று-
அவனும் சொன்னதில் வரும் கொள்.
அயலவனையும்-
யோசிக்க வை.
அவனுக்கும் சேர்த்தே-
உன் மொழியில்
தேசிய கீதம் பாடிப் பழகு!!
தேவாரங்களும் பொய்க்கட்டும்.!
-முல்லைஅமுதன்.
19/12/2010

Monday, 13 December 2010

நீங்கள்


நீ விதைத்தவைகள்
பூக்கும் வேளையில்
திசைகள் முறிந்தனவோ?
**
அவர் பற்றியோ..
இவர் பற்றியோ..
இல்லாமல் உன் முகம் பார்த்து நிற்கின்றன..
உன் செடிகள்!
ஒரு உழைப்பு ஓய்வு கொள்கிறது!
சக பயணி-
கிளை பிரிகிறது.
**

நாற்றங்கால்களாய் நாங்கள்.
சிலகணம் நினைப்பதுண்டு..
வலிக்காமல் வாழ்க்கையில்லை.
எனினும்-
பிறர் மரணம் எனினும் வலிக்கவே செய்கிறது.
இங்கு-
தன் மரணம் பற்றியே உழல்கிறது.
**



சிலுவை யுத்த நாட்களில்
புத்தனின் அடவடித்தனம்.
வியாபாரிகளின் உலகம்.

நீங்கள் நாங்களாகி
நாமாக, நாணாக
இணைகையில்
பாதி வழியில்
பாதை தவறியதாய்
நான் நின்றேன்.....

என் தாய்க்கும்
மகனாகி
எனக்கும் நண்பனாகி
தோள்தொட்டாய்!
தொடர்ந்தாய்!!

என் தோட்டத்தில்
விழுதுகள் இறுகியதாய்
உணர்ந்தேன்
இப்பொழுது
வேரறுந்து நின்றேன்!
காற்றும்
பொய் சொல்லிச் சென்றது!!