Saturday 31 December 2011

காதலித்துப் பார்..!



உன்னையே காதலித்துப் பார்..
உலகம் உன்னுள் சுருண்டு கொள்ளும்..
காதலித்துப் பார்..!!
காதல் இல்லையேல் எதுவும் இல்லை..
காதலித்துப் பார்..!!!
யாதும் உன் விரல் சொடுக்குக்கு காத்திருக்கும்..
காதலித்துப் பார்..!!!!
ஏவுகணைகள் சேவகம் செய்யும்...
காதலித்துப் பார்..!!!!
ஈழம் உனக்கு வாய்த்திருக்கும்...!

-முல்லைஅமுதன்

Sunday 25 December 2011

நூல்களும்....


நூல்கள் எனக்குச் சொந்தம்.
எதை இழப்பினும் அவற்றை இழக்கச் சம்மதமில்லை.
உனக்கு எப்படியோ?
எனக்குள் வலி எடுத்தது.
யாரோ வாள் எடுத்துச் செருகியதாய்
குருதி கொட்டுகிறது.
சுலபமாய்-
சொல்ல உனக்கு முடிந்திருக்கிறது.
அன்பை அறுப்பது போல ..!
முன்னரும்-
உறைவாளைச் செருகுவது போல
நூலை இடுப்பில் செருகிச் சென்றான் நண்பன்..
இப்போது நீ..!...
இதயத்தை தருமாப் போல நூலை உன் கையில் சேர்த்தேன்.
தொலைந்து விட்டதாய் சொல்கையில் மொத்தமும் இழந்ததாய்...
உயிர்ப்பென எழ வைப்பதே நூல் என்பதை எப்போது உணரப் போகிறாய்...?
இப்படிச் சொல்லி எவரையும் ஏமாற்றிவிடாதே....
என்னைப்போல இறந்து விடுவார்கள்...!
- முல்லைஅமுதன் -

Saturday 5 February 2011


உருவாகும் போராளி!
இப்படி-
உட்கார்ந்து கொள்ள
உனக்கு முடிகிறது?
தந்தையைப் பற்றி
புகார் செய்ய
பொலிசிடம் போன
உன் தங்கை
கற்பழிக்கப்பட்டு
திரும்பி வரவும்..
பயங்கரவாதி என
கைது செய்யப்பட்ட
உன் தம்பி பற்றி
விசாரிக்கப்போன
உன் அம்மா
பிணமாய் வந்ததும்..,
இறந்த உடலைக் காட்டி
'இது உன் தம்பியா?'
என்ற போது
இல்லை என்று அழுதபடி
பொய் சொன்ன அக்காள்
நிரந்தரமாய்-
அழுகையைக் கட்டிக்கொண்டதும்..,
இதற்குப் பிறகும்
உட்கார்ந்து கொள்ள
உன்னால் முடிந்திருக்கிறது.!
ஒன்று சொல்வேன்-
உனக்குள்ளும்
ஒரு போராளி
உருவாகி கொன்ன்டிருக்கிறான்
என்பது எனக்குத் திடமாகத் தெரிகிறது!
-முல்லைஅமுதன் (-1994-)

Sunday 23 January 2011


இன்று வரை..!
குடை வழி ஒழுகும்
மழை நிர்
குடி நீராகும்..
சேற்று நீர் முகம்
துடைக்கவும் ஆயிற்று!
நடை பாதை கூட
எங்கள் குடியிருப்பாயிற்று..
அகதி என்று சொல்லாதே!
இடப்பெயர்வு என
அடித்துச் சொல்லும் காற்று!
எனினும்..எனினும்..
இன்றுவரை-
ஹெலிக்கு, பொம்பருக்கு-
பயந்து விழுந்து அழுமே
என் குழந்தை!
நாளாந்த வலியாக இது தொடரும்..
முல்லைஅமுதன்.